தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 ஜனவரி, 2017

புதுவடிவம்






தீயிடல் இல்லை 
கல்லெறிதல் இல்லை 
ஆனாலும் 
அரசுகள் அசைகின்றன 

அடிதடி இல்லை 
ஆபாச வசவுகள் இல்லை 
எனினும் 
காளைகளின் பேரிறைச்சல் 
கடல் தாண்டியும் கேட்கிறது 

தலைவர்கள் எவருமில்லை 
ஆனாலும் 
தலைவர்களாகவே 
எல்லோரும் தெரிகிறார்கள் 

ஊழல்வாதிகளும் 
ஊடக நரிகளும் 
கபட வேஷதாரிகளும் 
கரையேற்றப்படுகிறார்கள் 
ஆனாலும் 
பகலிலும் இரவிலும் 
இவர்கள் மீதுதான் 
வெளிச்சம் பாய்ந்து கொண்டே இருக்கிறது 

மகாத்மாவின் அறப்போராட்டம் 
மெரினா மண்வெளியில் 
புதுவடிவம் பெறுகிறது 

இவர்களது கோரிக்கை மீது 
இருவேறு கருத்து இருக்கக்கூடும் 
ஆனாலும் 
இவர்களது போராட்ட வடிவத்தை 
எவராலும் புறந்தள்ள முடியாது 

உரிமைக்கானக் குரலை 
ஒலிப்பது எவ்வாறென்று 
அரிச்சுவடியை ஆத்திச் சூடியாய் 
அடுத்தத் தலைமுறைக்குத் தந்திருக்கிறார்கள் 

இனிவரும் போராட்டங்கள் எல்லாம் 
இவர்கள் போட்ட 
இராஜப் பாதையிலேயே 
எவருக்கும் இடையூரின்றிப் 
பயணிக்க வேண்டும் 
இல்லையெனில் 
இந்திய அரசியல்வாதிகளே 
ஈ எறும்பும் உங்களை மதிக்காது 

கற்று கொடுப்பது எங்கள் இனம் 
எங்களுக்கு கற்று கொடுக்க நினைப்பது 
அறிவீனம் என்பதை 
மெரினா மணல் துகள்கள் 
எதிரியாய் வரும் எவருக்கும் 
இனி உரக்க சொல்லும் 

வாடி வாசல் வழியாகப் 
புதிய வரலாற்றைப் 
படைத்திருக்கிறார்கள் 
எங்கள் இளம் காளைகள்!

திங்கள், 25 ஜூலை, 2016

அரக்க எச்சம்





வருவது
வலை என அறியாது
வாழ்விழக்கும் மீன்

வாழ்விழந்த மீனால்
வாழ்வுவுறும் வலைஞர்

எங்கிருந்தோ
இவரைக் குறி பார்க்கும்
இலங்கை அரக்கன்

உயிர்மைக்கான போராட்டம்
உடன்வரும் இடரை
உணர்வதில்லை

கொல்வதற்கும்
கொல்லப்படுவதற்கும்
நியாயங்கள் உண்டு
முன் இரண்டும்
இயற்கை அங்கீகரித்த
எல்லா உயிர்க்குமான
அடிப்படை விதி

மூன்றாவது மட்டும்
பரிணாம வளர்ச்சியில்
மனிதன் பெற்ற 
அரக்க எச்சம்!


ஞாயிறு, 24 ஜூலை, 2016

முதுமையின் விழைவா





உன் வரவிற்கு பின்னர்
என்னுள்
எப்படி நிகழ்ந்தது
இந்த மாற்றம்?

உன்
கன்னங்குழிச் சிரிப்பில்
நான் ஏன்
கரைந்து போகிறேன்?

உன் சின்ன விரல்
ஸ்பரிசத்தில்
என் சிந்தனைக்குள்
தேனாறு பாய்வதெவ்வாறு?

மூடித் திறக்கும்
இமைகளுக்குள்ளும்
உன் முகம் மட்டும்
தெரிவதெப்படி?

என்
இதயத் துடிப்பில்கூட
உன் பெயரே
உரக்க ஒலிப்பது ஏன்?

பேரன் முகத்தில்
மகன் முகத்தை காணும்
முதுமையின் விழைவா?
அல்லது
காலம் காலமாய்
இதுதான்
இயற்கையின் இயல்பா?

செவ்வாய், 7 ஜூன், 2016

பகலவனுக்கு பிரியாவிடை


(Crystal Sherriff என்ற ஆங்கில கவிஞர் Black Holes இன் பாதிப்பு குறித்து Goodbye to the Sun என்ற தலைப்பில் எழுதிய  நான்கு வரி கவிதை  உள்ளத்தை நெருடச் செய்யும்.அக்கவிதையின் தமிழாக்கத்தை இங்கு தந்திருக்கிறேன்.)

வானிலிருந்து அது வெளியே வந்தது
எனது சூரியனை கருமையாக்கியது
எனது வெளிச்சத்தை முடமாக்கியது
எனது பகலை கிரகணம் சூழ்ந்தது       
எனது இரவை  உருவாக்கியது
 கரும் பள்ளங்கள்
கண்ட அனைத்தையும் விழுங்கியது
எனது இதயத்தையும் சேர்த்தே!


சனி, 19 மார்ச், 2016

உன்னால் உயரும்






                                       

வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை


புலியை முறத்தால் விரட்டிய
புறநானுற்றுப் பெண் கூட
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
சான்றோனாக்குதல் தந்தையின் கடனே என
ஆணாதிக்க சிந்தனைக்குள்
அமிழ்ந்து போனாள்

போற்றா ஒழுக்கம் கொண்ட கோவலனைத்
தூற்றாது தலையிலேற்றித் திரிந்தாள் கண்ணகி
அடக்குதலும் அடுக்களையில்
முடக்குதலுமே தம் பணியென
எம் தலைமுறையினர்
சிறையிட்டுச் சிரித்தனர்

என் அன்புப் பேத்தியே
மாற்றங்கள் மலருகின்ற
மகத்தான தருணமிது
சமுதாயச் சன்னல்கள்
மெல்லத் திறந்து
முடங்கிக் கிடந்த நம்மீது
விடுதலை வெளிச்சத்தைப்
பாய்ச்சுகின்ற நேரமிது

இனி ஆணுக்கு நிகராக… அல்ல
அதை விடவும் மேலாகச்
சாதித்துக் காட்டிச்
சரித்திரம் படைப்பது
நம் கடமை!

ஆணினத்தின் பலவீனமாம்
கொலை களவு காமம் மது
இவற்றில் பங்கு கேட்பதல்ல
நாம் கோரும் பெண்ணுரிமை!

ஆடைக் குறைப்பும்
அலங்கார மாற்றங்களும்
அடிமை விலங்கொடித்த
அறிகுறிகள் ஆகாது!

ஜான்ஸி ராணி முதற்கொண்டு
சானியா மிர்சா வரை
சாதனைகளால் மட்டுமே
நினைவு கொள்ளப்படுகிறார்கள்

என் செல்லமே…!
அறிவியல் அரசியல்
இலக்கியம் ஆன்மீகம்
இன்னும் பல துறைகளில்
பெண்கள் கோலோச்சும் போதுதான்
நாம் கொண்ட துயரங்கள்
நம்மை விட்டு விலகும்!

வறுமையில் வாடும் பாட்டியின்
வார்த்தைகளா இவையென
நீ வியப்பது புரிகிறது
அறிவுக்கு வறுமையில்லை
என் அன்புச் செல்லமே!

நாளைய நாடு
பெண்களால் மட்டுமே மலரும்
நம்பிக்கை கொள்
உன்னாலும் இந்த உலகம்
உயரப் போகிறது ஒரு நாள்!

புதன், 2 மார்ச், 2016

புத்தகங்கள்



 

http://www.vallamai.com/wp-content/uploads/2016/02/book-store.jpg

   (வல்லமை இதழில் பாராட்டிற்குரிய கவிதையாகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை)

வண்ண வண்ண சிந்தனைகளை
வார்த்தெடுத்தப் புத்தகங்கள்
எண்ணக் குவியல்களால்
புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள்
இன்று
கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது
காலத்தின் கோலம்!

அன்று
வாய் மொழிச் சொற்களில்
வலம் வந்த சிந்தனைகள்
கல்லுக்குள் இடம் மாறி
ஓலைக்குள் உருமாறி
தொழில் புரட்சி ஈன்றெடுத்த
அச்சு இயந்திரத்தால்
காகிதத்திற்குள் புகுந்து
புத்தகமாய்ப் பரிணமித்தது!

புவியின் நிலை மாற்ற
புத்தகங்கள் ஆற்றிய பணி
போற்றற்குரியது!

இன்று
காகிதத்திலிருந்து
டிஜிட்டலுக்குத் தாவும்
அறிவியல் தருணம்!

வடிவ மாற்றமென்பது
இயற்கையின் இயல்பே

போர்டு ஐகானில் பயணிப்பவர்கள்
மாட்டு வண்டிகள்
மரணித்துவிட்டதே என்று
கவலை கொள்வதில்லை!
என்றாலும்
புத்தகங்களுக்கும்
நமக்குமான உறவை
எந்த டிஜிட்டலினாலும்
டெலிட் செய்ய முடியாது! 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புரையோடிய புற்று நோய்





காலில் செருப்பின்றி
மர நிழல்களை குடைகளாக்கி
பள்ளிச் சென்ற காலமெல்லாம்
பழங்கதையாகிவிட்டது

வணிகமய வாழ்வில்
நிசான் காரில்
வாழ்க்கைப் பறக்கிறது

அன்று
தெருவோர ஏழைக்கு
மதிய உணவை
மனமுவந்து அளித்ததும்
மற்றவர்க்கு உதவும்போது
ஏற்படும் மகிழ்வும்
இயல்பாய் இருந்தது

இன்றோ
இரக்கத்தோடு
உறக்கத்தையும் மறந்த
இலக்கில்லா ஓட்டமொன்று
எல்லாவற்றையும் தொலைத்தது

ஜோடிக்கப்பட்ட மேடையில்
ஆடம்பரப் பேச்சோடு
முதியோருக்கு நிவாரணம்
சொந்தத் தாயும் தந்தையுமோ
முதியோர் இல்லத்தில்

இப்படி
ஏய்த்துப் பிழைப்பவர்க்கே
சமூக அங்கீகாரமென்றால்
நம்முடைய வளர்ச்சி
புரையோடிப் போன
புற்று நோயை ஒக்கும்!