(ஜாக் ப்ரிலட்ஸ்கி (Jack
Prelutsky) அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த
மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். அவருடைய Be Glad Your Nose is on Your Face என்ற இந்த கவிதை படிப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும் படைப்பின் மேன்மையை பறை சாற்றுகிறது."ஆட்டிற்கும்
வாலை அளந்துதான் வைத்திருக்கிறான்" என்ற நமது பழமொழியை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது)
வேறு இடத்தில் ஒட்டப்படாமல்
முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென
நீ சந்தோஷப்படு!
இருக்கின்ற இடத்தைவிட்டு
வேறு இடத்தில் அது இருந்திருந்தால்
நீயே உன் மூக்கை
முற்றிலுமாய் வெறுத்திருப்பாய்
கற்பனை செய்து பார்
கால் விரல்களுக்கிடையில்
அது அமைந்திருந்தால்
பாதத்தை நுகரவேண்டிய கட்டாயம்
உனக்கு விருந்தாகவா இருக்கும்?
உச்சந்தலையில் மூக்கு இருந்திருந்தால்
அச்சத்தின் ஊற்றாய் மாறியிருக்கும்
முடியுடன் அது கொள்ளும் மோதல்
விரக்தியின் எல்லைக்கு
உன்னை விரட்டியிருக்கும்!
காதுக்குள் மூக்கு இருந்திருந்தால்
பேரழிவை அது உருவாக்கும்
நீ தும்முகின்ற நேரமெல்லாம்
மூளைக்குள் பூகம்பம் வெடிக்கும்!
மாறாக
முகவாய்க்கும் கண்களுக்குமிடையே
அழகாய் அமைந்திருக்கிறது மூக்கு
வேறு இடத்தில் ஒட்டப்படாமல்
முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென
நீ சந்தோஷப்படு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக