(வல்லமை இதழில் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டது)
பூட்டுகளுக்குள் புதைந்துவிட
நான்
புராண காலத்து பெண் அல்ல
பூமியைப் புரட்டிப்போடும்
புதுயுகத்தின் அடையாளம்!
நிலம் பார்த்து நடந்து
நித்திரையைத் துறந்து
சுயத்தை இழக்கும்
சோகச் சுவடல்ல நான்!
வானில் வலை வீசி
வரலாற்றை உருவாக்கும்
அடுத்தத் தலைமுறையின்
ஆரம்பம்!
வீட்டிற்குள் மாந்தரைப்
பூட்டிவைத்த விந்தை மனிதரை
புறக்கணித்த பாரதிப் படையின்
புது வாள்!
அன்று
உள்ளே வைத்துப் பூட்டியது
எங்களை உறைய வைக்க
இன்று
வெளியே பூட்டுவது
எங்கள் இறகுகளை விரிக்க!
இறகு விரித்து
இன்னல் துடைப்போம்
பூட்டுகள் திறந்து
புது வழி அமைப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக