தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 ஜூன், 2015

யார் மீது கோபம்


                        (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)


சுட் டெரிக்கும் பார்வை

சூரியனை கருக்கும் கூர்மை
யார் மீது கோபம் உனக்கு

மற்ற சிறுவருக்கெல்லாம்

செல்வத்தோடு சீருடையும் தந்து
பள்ளிச் செல்ல வைத்துவிட்டு
பாதையோரப் பறவையாய் 
உன்னை மட்டும் படைத்தானே
அந்த பரமன்  மீதா?

எத்தனைதான் உழைத்தாலும்

ஏற்றம் எதுவும் காண இயலாது
சிந்தையது கலங்கி சீரழிக்கும்
குடிக்குள் குடிமூழ்கிப் போனானே
அந்த தந்தை மீதா

சிறுவாட்டு பணத்தையெல்லாம்

சீட்டு கம்பெனியில் தொலைத்து
சீரழிந்து  சிதறிப் போனாளே
செல்ல அம்மா அவள் மீதா

அந்நியர்கள் இங்கிருந்து அகன்று

அறுபதாண்டுகள் ஆகியும் கூட 
சொந்த மைந்தர்களை தினம்
சோற்றுக்கு அலைய வைக்கும்
சுதந்திர நாட்டின் மீதா

சின்னஞ் சிறுவரெல்லாம்

சிதைக்கப்பட்ட சிற்பங்களாய்
எங்கும் அலைவது கண்டும்
சங்கடப்படாத சமூகத்தின் மீதா

வாழவழி தெரியாத உனக்கு

ஏதும் செய்ய இயலாது
புகைப்பட மெடுத்தவர் மீதா
கவிபாட வந்த எங்கள் மீதா

யார் மீது கோபமாயினும்

நாளையது நிச்சயம் மாறும்
விடியல் உன் இருள் மீது  
வேண்டிய வெளிச்சம் பாய்ச்சும்
நம்பிக்கையோடிரு 
நாளைய உலகம்
உனக்காகவே சுழலும்!

திங்கள், 15 ஜூன், 2015

நினைத்ததெல்லாம் நடந்தும்…


                       (வல்லமை இணைய இதழில் இடம்பெற்ற கவிதைகள்)

                           
அந்த காலத்து காதலர்களா
அல்லது
அற்ப சுவைக்காக
ஆண்டவனிடம் சாபம் பெற்ற
ஆதாமும் ஏவாளுமா
இவர்கள்
எதுவும் இல்லாதிருந்தபோது
எல்லாமும் பெற்றிருந்தனர்
எல்லாமும் கிடைத்தபோது
எதையோ இழந்து நிற்கின்றனர்!
ஆடைகள் இல்லாதபோது
இவர்கள்
அவமானம் அடைந்ததில்லை
இப்போது
ஆடை அரைகுறையானதால்
மானம்
மரணமடைந்து கொண்டிருக்கிறது!
மலை மரம் வெட்டவெளி
எங்கு இருந்தாலும்
இவர்களது
அந்தரங்கம் அசிங்கப்பட்டதில்லை
இப்போது
மூடிய அறைகளுக்குள்ளே கூட
முகம் தெரியாத கருவிகளால்
இவர்கள்
முக்காடு நீக்கப் படுகிறது!
ஓ மனித இனமே
உன் ஆறாம் அறிவு
நேர்மையின்றி நடந்ததால்
நினத்ததெல்லாம் நடந்தும்
நீ
நிர்வாணமாய் நிற்கிறாய்!


சனி, 11 ஏப்ரல், 2015

அப்பா குட்டையில் விழுந்தபோது...






(ஆல்பிரெட் நோயிஸ்(Alfred Noyes) இங்கிலாந்து நாட்டு கவிஞர். நாடக ஆசிரியரும் கூட. அவர் இயற்றிய "Daddy fell into the pond" என்ற ஆங்கில நகைச்சுவைக் கவிதையினைத் தமிழில் தழுவி தந்திருக்கிறேன்.)

அத்தனை பேரும் அலுத்துக் கொண்டனர்
அந்தி வானம் சாம்பல் வண்ணமானது
எங்களுக்கு சொல்வதற்கோ செய்வதற்கோ ஏதுமில்லை
சுவையற்ற நாளொன்று சுருங்கிக் கொண்டிருந்தது
இந்நாளில் இதற்கு மேல் ஒன்றுமில்லை
என்றே நினைத்திருந்தோம்
அப்பொழுதுதான்
அப்பா குட்டைக்குள் விழுந்துவிட்டார்!

அத்தனை பேரின் முகமும்
ஆனந்தத்தில் வெளிச்சமானது
எங்கள் வீட்டு டைகர்
சந்தோஷத்தில் துள்ளி குதித்தது
"கேமராவை எடுத்து வாருங்கள் சீக்கிரம்"
அல்லிக் கொடிகளை மெல்ல விலக்கியவாறு
அப்பா தவழ்ந்து வந்து கொண்டிருந்தார்... க்ளிக்

அப்பொழுது
தோட்டக்காரார் திடீரென்று இரு முட்டிகளைத்
தட்டியெழுந்து அசைந்தாடினார்
வாத்துகள் அத்தனையும் முட்டாள்களைப் போல
சத்தம்போட ஆரம்பித்தன
கிழ வாத்தொன்று சிரிப்பது போலிருந்தது
அந்த சத்தம்!
ஓ சந்தோஷத்தைக் காட்டாத
ஜீவன் எதுவும் அங்கில்லை!
அப்பா குட்டையில் விழுந்தபோது!

திங்கள், 16 மார்ச், 2015

அமெரிக்காவை ஏன் வெறுக்கிறீர்கள்







(ஜாக்கி காம்ப்டன்Jackie Compton)  அமெரிக்காவின் முன்னணி கவிஞர்களில் ஒருவர். அவர் இயற்றிய Why hate America என்ற கவிதையின் தமிழாக்கத்தை இங்கு தந்திருக்கிறேன்.வஞ்சப் புகழ்ச்சியில் இயற்றப் பட்டிருக்கிறது இக்கவிதை.) 

ஆயிரம் காரணங்கள் உண்டு
அமெரிக்காவை வெறுக்க
அத்தனையையும் அடுக்கிட
இயலாது எனக்கும்
நீங்கள் கூட வெறுக்கலாம்
தலை வணங்க அரச குடும்பங்கள்
இல்லாதஅமெரிக்காவை!

  
கடலிலிருந்து ஒளிரும் கடலுக்கு
சுதந்திரமாய் செல்வதற்கும்
செல்லும் பொழுதே
பொன்னென மின்னும்
தானிய அலைகளை காணமுடிகிறதே
அதற்காக அமெரிக்காவை
நீங்கள் வெறுக்கலாம்

நீங்கள் எதனை நம்பினாலும்
நீங்கள் எதன் மீது
நம்பிக்கை வைத்திருந்தாலும்
அவற்றிற்கான உரிமைகளை
இங்கு உருவாக்கித் தருவது
கடவுளன்றி  அரசுகள் அல்ல என்பதற்காக
அமெரிக்காவை நீங்கள் வெறுக்கலாம்

சுதந்திர சிந்தனை கதவுகளை
அமெரிக்கா மூடுவதில்லை என்பதற்காக
நீங்கள் அமெரிக்காவை வெறுக்கலாம்

வாயில் கதவை திறந்து வைத்தால் போதும்
வாய்ப்புகள் வந்து வரவேற்கிறதே
அதற்காக
அமெரிக்காவை நீங்கள் வெறுக்கலாம்

பட்டியலுக்கு முடிவில்லை என்பதால்
பாதியில் முடிக்கிறேன்


அமெரிக்கா
என் இதயத்தின் இனிமை நீ
உன்னால் மட்டுமே
உன்னை வெறுக்கும் உரிமைகூட
அவர்களுக்கு கிடைத்திருக்கிறது
அடக்குமுறை பயங்கள் எதுவுமின்றி!







வெள்ளி, 9 ஜனவரி, 2015

அங்கு எழட்டும் என் தேசம்




(இந்தியா உலகிற்கு தந்த அற்புதமான கவிஞர்களுள் ரவீந்தரநாத் தாகூரும் ஒருவர். இந்திய தேசிய கீதம் அவரால் இயற்றப்பட்டதுதான் என்பதை அனைவரும் அறிவோம். அவரின் கீதாஞ்சலி காவியத்திற்கு நோபெல் பரிசு கிடைத்தது. கீதாஞ்சலியில் என்ணற்ற அற்புத கவிதைகள் இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஒன்றைத்தான் இங்கு தமிழாக்கித் தந்திருக்கிறேன்).



எங்கு மனம் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கிறதோ

எங்கு அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ

எங்கு உட்பூசல்களால் உலகம்
உடைந்து துகள்கள் ஆகாமல் இருக்கிறதோ

எங்கு தளர்வறியா உழைப்பின் கரங்கள்
நேர்த்தியை நோக்கி நீள்கிறதோ

எங்கு தெளிந்த பகுத்தறிவு நீரோடை
பாழாய்ப் போன பழக்கங்கள் என்னு பாலைவனத்திற்குள்
பாதை மாறாமல் பயணிக்கிறதோ

எங்கு உங்கள் மனதை
பரந்த நினைவு செயல்களை நோக்கி
எடுத்து செல்ல முடிகிறதோ

அங்கு, அந்த சுதந்திர சொர்க்கத்தில், ஓ தந்தையே
என் தேசம் எழட்டும்!



திங்கள், 8 டிசம்பர், 2014

மூக்கு முகம் சந்தோஷம்

               


(ஜாக் ப்ரிலட்ஸ்கி (Jack Prelutsky)  அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.  அவருடைய Be Glad Your Nose is on Your Face என்ற இந்த கவிதை படிப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும் படைப்பின் மேன்மையை பறை சாற்றுகிறது."ஆட்டிற்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறான்" என்ற நமது பழமொழியை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது)

வேறு இடத்தில் ஒட்டப்படாமல்
முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென
நீ சந்தோஷப்படு!
இருக்கின்ற இடத்தைவிட்டு
வேறு இடத்தில் அது இருந்திருந்தால்
நீயே உன் மூக்கை
முற்றிலுமாய் வெறுத்திருப்பாய்

கற்பனை செய்து பார்
கால் விரல்களுக்கிடையில்
அது அமைந்திருந்தால்
பாதத்தை நுகரவேண்டிய கட்டாயம்
உனக்கு விருந்தாகவா இருக்கும்?

உச்சந்தலையில் மூக்கு இருந்திருந்தால்
அச்சத்தின் ஊற்றாய் மாறியிருக்கும்
முடியுடன் அது கொள்ளும் மோதல்
விரக்தியின் எல்லைக்கு
உன்னை விரட்டியிருக்கும்!

காதுக்குள் மூக்கு இருந்திருந்தால்
பேரழிவை அது உருவாக்கும்
நீ தும்முகின்ற நேரமெல்லாம்
மூளைக்குள் பூகம்பம் வெடிக்கும்!

மாறாக
முகவாய்க்கும் கண்களுக்குமிடையே
அழகாய் அமைந்திருக்கிறது மூக்கு
வேறு இடத்தில் ஒட்டப்படாமல்
முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென
நீ சந்தோஷப்படு!










சனி, 22 நவம்பர், 2014

தங்க மலர்கள்


 (ஆங்கில கவிஞர்களில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவருடைய கவிதைகளில் ஒன்றான The Daffodils என்ற கவிதையினை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன் )


செல்லுமிடமறியா மேகமென
பள்ளம் குன்றென திரிந்திருந்தேன்

தங்க மலர் கூட்டமொன்றை
தற்செயலாய் காணப் பெற்றேன்

ஆர்ப்பரிக்கும் கடலோரம் அவை
முடிவிலா வரிசையாய்
அணிவகுத்து நின்றன!

ஒரே பார்வையில்
பல்லாயிரம் மஞ்சள் மலர்கள்
தலையாட்டி நடமிடக் கண்டேன்!

பின் நின்ற அலைகளின்
பேரரவ ஆட்டம்
பூக்களின் நடனம் முன்
பொலிவிழந்து போனது!

காணற்கரிய இக்காட்சியினை கண்டு
களிக்காதவன் கவிஞன் இல்லை

கண்டேன்... கண்டேன்...
கண்டுகொண்டேயிருந்தேன்!

சின்னதாய் ஒரு நினைவு
சித்திரக் காட்சி இதனால்
எனக்கு சேர்வதுதான் என்ன?

அமைதியற்ற  நாட்களில்
வெறுமையுற்ற மன நிலையில்
வீழ்ந்து கிடக்கும் பொழுதெல்லாம்
உள்ளிருக்கும் விழிகளில்
ஒளியூட்டும் இக்காட்சி!

தனிமையுற்ற நாட்களில்
இனிமையதை சேர்க்கும்!

தாவி எழும் உள்ளம்
தங்க மலர்கள் இவற்றோடு
தளிராட்டம் போடும்!