(வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)
நாளும் தவமிருந்து
நான் பெற்ற வரமடா நீ
என் கனவுகளின் மெய்பொருளும்
கவிதைகளின் உட்பொருளும்
நீ மட்டுமே
சின்னக்கல் உன்னை இடரினாலும்
என் சிந்தை கலங்குமடா
உயரத்தில் உனைப் பார்க்க
என் உள்ளம் நடுங்குதடா
தள்ளாடித் திரிந்த தகப்பனவன்
சொல்லாமலே போய்விட்டான்
அதனால்
பொல்லாத வறுமையை காட்டி
உன்னைப் பள்ளிக்கு அனுப்பாமல்
தேநீர் கடைக்கு
தெருவோரம் தாள் பொறுக்க
மெக்கனிக் ஷெட்டிற்கு
மேலத் தெரு ஓட்டலுக்கு
உழைக்கச் சொல்லி அனுப்பி
அதில் உயிர் வாழ்வேன்
என நினைத்துத்தான்
மரமேறிச் சென்று என்
மனத்தை வதைக்கிறாயா
நீவீத் தலைவாரி
நெற்றியில் முத்தமிட்டு
பாடசாலை செல் பைந்தமிழே
என நாளும் வழியனுப்பும்
பாவேந்தன் பேத்தியடா நான்!
எட்டாதக் கல்வியினை
எப்பாடு பட்டேனும் உனக்களித்து
யாரும் எட்டாத உயரத்தை
உன்னை எட்டச் செய்வேன்
இப்போது இறங்கி வா
வறுமையை வென்று
வாழ்வை வசமாக்குவோம்
வளர்ந்த மரமாகி
வறியவர்க்கு நிழல் கொடுப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக