(வல்லமை இணைய இதழில் இக்கவிதை, வெளியான வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது)
ஆசைக்கொரு மகனை
அன்பாய் ஈன்றெடுத்து
தோளில் சுமந்து
நாளெல்லாம் திரிகின்றேன்
இன்னொருவர் தோளில்
எத்தனை நாள் பயணம்
தன் காலில் தான் நிற்கும்
தன்மையை அவன்
பெற்றாக வேண்டும்
என் அனுபவ உயரத்தில்
அவன் அகிலத்தைக் கண்டு
தனக்கொரு வழியினை
தானே அமைத்து
தலை நிமிர்ந்து
நடந்திட வேண்டும்!
ஊர் கோவில் திருவிழாவை
உயரத்தில் இருந்துப் பார்த்தாலும்
தானுயரும் நிலை வரும்பொழுது
வானோக்கி நடக்காத
வரமவனுக்கு வாய்க்க வேண்டும்!
தள்ளாடி நான் நடக்கும்
பொல்லாத காலம்
புலருகின்றபொழுது
எல்லோரும் போற்றும் வண்ணம்
என் இரு கரம் பற்றி
மெல்ல அழைத்துச் செல்லும்
நல்ல மனம் நாளு மவன்
நாதனருளால் பெற வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக