தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 பிப்ரவரி, 2016

எங்களை அறியவில்லை



            வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு                                            செய்யப்பட்டது

ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை
அங்காடித் தெருக்கள் தோறும்
கையேந்த வைத்த
கருணையற்றவர்கள் நாங்கள்

அன்பிற்கு நீ தந்த இசைவினை
அடிமை சாசனமென்று எண்ணி
உன்னை அடக்கி விட்டதாய்
போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்

உன் பலம் உனக்குத் தெரியாதென
நிச்சயமாய் நம்பும் நாங்கள்
எங்கள் பலவீனங்களை
என்றுமுணர்ந்ததில்லை

அதனால்தான்
இயற்கையை வென்றுவிட்டோமென்ற
எங்கள் இறுமாப்பு
கொட்டிய மழையில்
முற்றிலுமாய் கரைந்தது
பண்பற்ற எங்கள் செய்கைகளால்
நீ பதற்றமடையும் பொழுதெல்லாம்
மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து
மயக்க ஊசிப் போடுகிறோம்
ஆனால் நாங்களோ
மத வெறியுடனேத் திரிகிறோம்
மயக்க ஊசிப்போட மட்டும்
மருத்துவர் எவருமில்லை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக