தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஜனவரி, 2016

புது வாள்


(வல்லமை இதழில் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டது)பூட்டுகளுக்குள் புதைந்துவிட 
நான்
புராண காலத்து பெண் அல்ல
பூமியைப் புரட்டிப்போடும்
புதுயுகத்தின் அடையாளம்!

நிலம் பார்த்து நடந்து
நித்திரையைத் துறந்து
சுயத்தை இழக்கும்
சோகச் சுவடல்ல நான்!
வானில் வலை வீசி
வரலாற்றை உருவாக்கும்
அடுத்தத் தலைமுறையின்
ஆரம்பம்!

வீட்டிற்குள் மாந்தரைப்
பூட்டிவைத்த விந்தை மனிதரை
புறக்கணித்த பாரதிப்  படையின்
புது வாள்!

அன்று
உள்ளே வைத்துப் பூட்டியது
எங்களை உறைய வைக்க
இன்று
வெளியே பூட்டுவது
எங்கள் இறகுகளை விரிக்க!

இறகு விரித்து
இன்னல் துடைப்போம்
பூட்டுகள் திறந்து
புது வழி அமைப்போம்!

புதன், 27 ஜனவரி, 2016

இமைகள் இல்லா விழிகள்

மழை நீர் மாசுபட்டால்
பயிர்களின் உயிர்மை
பறிபோகும்

இமைகள் இல்லா விழிகள்
பார்வையை இழக்கும்

உமிழும் எச்சில்
கடவுளுருவாய்
காட்சி தந்தாலும்
வணக்கத்திற்குரியதாய்
அது ஏற்கப்படாது

கடையாணி இல்லா
வண்டிப் பயணம்
களிப்பைத் தராது

பளபளக்கும் பட்டாடைகள்
செத்தப் பூச்சிகளின்
சாபத்தையே தாங்கி நிற்கும்

கொள்ளை பணத்தில்
கோவில் கட்டினால்
கற்சிலைகள் இருக்கும்
கடவுள் இருக்காது

பண்புகள் இல்லா
நாட்டின் வளர்ச்சி
பண மேடாகி
அமைதியை இழக்கும்!