தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 நவம்பர், 2010

ஸ்ரீ அனந்த நல்லூர் மாரியம்மன் ஸ்தோத்திரம்

அனந்த நல்லூர் என்ற சிற்றூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நன்னிலம் சாலையில் திட்டச்சேரி என்ற பேரூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது . இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாரியம்மன் இப்பகுதி மக்களின் கண்கண்டத் தெய்வமாகும். இம்மாரியம்மன் மீது சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஸ்தோத்திரம் இது. படித்துப் பயன்பெறுவதுடன் ஒருமுறை இவ்வாலயத்தையும் தரிசனம் செய்யுங்கள்.

காப்பு

முத்தான தமிழ் தன்னை மூதாட்டி அவ்வைக்கு

வித்தாகத் தந்தவனே விநாயகப் பெருமானே

பித்தாக நானிங்கே நல்லுர்ப் பெருமாட்டிதனை

பத்தாகப் பாடல் செய்ய பக்கம் துணை இருப்பாய்

1

வானமது ஊற்றாக வைகையது ஆறாக

தேனமரும் பூக்களது திருவிழா விளக்காக

திங்களது குடையாகத் தேன் ஈக்கள் பாட்டிசைக்க

மங்கலங்கள் சூழ்ந்திருக்க மாவிலைகள் வரவேற்க

தங்க நிறத் தாமரையாய் தேவிமுகம் சிரித்திருக்க

பொங்குகின்ற இன்பங்கள் புனலாகப் பெருக்கெடுக்க

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

எல்லோரும் இங்குற்ற ஏழ்மைத் துயர் நீக்கி

வல்லவராய் வாழ்வதற்கு வரமொன்று அளி(த்)தாயே

2

காணும் கனவெல்லாம் கருத்தாகி நின்று

தானும் நானுமென்னும் தன்னலம் போக்கி

வானும் மண்ணும் வயலும் வாழ்வும்

ஊணும் உயிரும் ஊடுருவிச் சென்று

நாணுரும் மங்கையின் நல்லெழில் கோலமாய்

நான் கண்ட தேவமகள் நல்லாட்சிப் புரிந்திட

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

பொல்லாதத் துயர்ப் போக்கி பொலிவுகள் பலவாக்கி

நல்லாராய் வாழ்வதற்கு நலமொன்றளி(த்)தாயே

3

சின்னஞ்சிறு பெண்ணாக செந்தமிழின் கண்ணாக

வண்ணமுறு நிலவாக வானத்து ஒளியாக

எண்ணமெங்கும் நிறைவாக ஏற்றந்தரும் கருவாக

தன்னலங்கள் தானொழிக்கும் தாரக மந்திரமாக

கண்மூடி துதிப்பவர்க்கு கலங்கரை விளக்காக

பெண்ணினத்தை காக்கின்ற பெரும் சக்தி வடிவாக

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

கல்லாரும் கற்றாரும் கொண்ட துயர் நீக்கி

செல்வராய் வாழ்வதற்கு செயதியொன்று அளி(த்)தாயே

4

கலியான காலமிதில் கல்லாக நில்லாமல்

ஒளியாக வந்திங்கு ஒயிலாக நடமாடி

தெளிவாக உணர்வோருக்கு தீந்தமிழ் சுவையாகி

எளிதாக எங்கும் இன்னருள் பொருளாகி

பொழிகின்றப் பொதிகைத் தென்றல் மழையாகி

மகிழ்வோடு எல்லோரும் உணர்கின்ற மாரியாகி

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

உள்ளமுடன் வணங்குகின்ற உனதருமை அன்பர்கள்

அல்லலின்றி வாழ்ந்திட ஆசியொன்று அளி(த்)தாயே

5

கார்மேக கூந்தல் கருணை மழைப் பொழிய

கால்களிரண்டும் கயவர்தம்மை கடிந்தொழிக்க

நீ கொண்ட கரங்களது நிதமருள் வழங்க

வான்கொண்ட திருமுகம் வண்ணத்தாமரையாய்

தேன்கொண்ட பூவாக தினம் நாடும் அன்பர்க்கு

பார்கொண்ட மாரியாக பரவசக் காட்சிதந்து

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

வல்லூறாய் வேதனைகள் வந்திங்கு ஏழையரை

கொல்லுகின்ற நிலை மாற்றி சொல்லொன்று அளி(த்)தாயே

6

முல்லையதுப் பாய்விரிக்க முகில்களங்கே குடைபிடிக்க

வெள்ளைமனம் கொண்டவர்கள் வீதியெல்லாம் நிறைந்திருக்க

எல்லையிலா அருள்மனமே எங்கெங்கும் சூழ்ந்திருக்க

கிள்ளைமொழி மாந்தர் கீதமது இசைத்திருக்க

தொல்லைதரும் பிணிகள் தூரத்தே மறைந்திருக்க

நல்லவர்கள் இங்கே நலமுடன் வாழ்ந்திருக்க

வில்லோடு விழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

உள்ளாடும் உன் நினைவு உயிரோடு உறவாகி

எல்லோரும் இன்பமுற ற்றமளி(த்)தாயே

7

காத்தவராயன் காவலாய் நின்றிருக்க

பூத்த மலர்கள் பூமாலை தொடுத்திருக்க

சாத்திரம் படித்தவர் சரணமென்றிருக்க

தோத்திரம்பாடி தோரணங்கள் ஆட

பார்த்தவர் கண்களில் பைந்தமிழ் ஊற்றாக

வார்த்தெடுத்த வடிவாக வந்துதித்து இங்கே

வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

கள்ளூறு மலராக கருணை மழைதான் பொழிந்து

வெல்லுகின்ற வழியொன்று விரைந்தளி(த்)தாயே

8

வங்கக் கடல் தாண்டி வணங்குபவர்தனை நோக்கி

சிங்கை நகர் சென்று செய்தி பல சொல்லி

மங்கை உன்னுருவை மானிடர்க்குக் காட்டி

உங்கள் துயர் தீர்க்கும் உமையவள் நானே

எங்கும் நிறைந்திருக்கும் சக்தியும் நானேயென்று

பொங்கும் உவகையோடு புரிய வைத்திங்கு

வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

வல்லவர்கள் வறியவர்களை வதைக்கின்ற நிலை மாற்றி

நல்லவராய் வாழ்வதற்கு நகையொன்று அளி(த்)தாயே

9

இரவோடுப் பகலாக எந்நேரமும் நினைவாக

உறவோடு உயிராக உள்ளத்துக் கனவாக

மறவாத நெஞ்சமிதில் மாரியென்னும் பெயராக

இறவாத இயற்கையின் எழிலரசி கோலமாக

வரவாக்கி இன்பமதை வாழ்வது வளமாக

உருவாக்கி தந்து இங்கு உமையாகி நின்று

வில்லோடுவிழிகாட்டி விழியாலே அருள்கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கையர்க்கரசியே

பல்லாண்டு இங்கே பக்தர்கள் வாழ்ந்திருக்க

எல்லாமும் தந்து ற்றமளி(த்)தாயே

10

கொநதை அரங்கனிவன் நல்லூர்ப் பாடல்களை

சித்தமுடன் பாடுகின்ற செந்தமிழ் வல்லார்

இத்தரையில் இன்பமுடன் எல்லாமும் பெற்று

உத்தமமாய் வாழ்ந்திருக்க உமையாகி நீயங்கே

வில்லோடு விழி காட்டி விழியாலே அருள் கூட்டி -அனந்த

நல்லூரில் அமர்ந்தவளே நங்கயர்க்கரசியே

நல்லத் தமிழ் கவிதை இதை சொல்பவர்க்கு காவேரி

வெள்ளமென நன்மைகளை விரைந்தளி(த்)தாயே

------

திங்கள், 15 நவம்பர், 2010

இரவுப் படைகள்(Mathew Arnold எழுதிய Dover Beach
என்ற ஆங்கில கவிதையின் தழுவல்)

தெளிவான கடல் அலைகள் மிளிரத்
தென்றல் வந்து அவைகளைத் தழுவ
நிலவொளி கடல் எங்கும் பரவ
இனிமை இது ! இந்த இரவு!
ஐயைந்து மைல்கள் தாண்டி
அழகுடனே மிளிரும் பிரெஞ்சு கரையும்
அன்பே சாளரத்தின் அருகில் நின்று
அலைகள் சாற்றுவதை கேண்மின் சற்றே
சிப்பிகளை கரை சேர்க்கின்ற அலைகள்
செப்புகின்ற மொழியினை கேட்டாயோ ? அதில்
தொக்கி நிற்கும் சோகத்தை உணராயோ?
மானிடத்தின் அழிவை எண்ணி வருந்தாயோ
மத்திய கடலின் ஓரம் நின்று
சோபோக்ளியஸ் கேட்டான் அன்று
ஓடிவரும் அலைகளின் ஓலத்திலே
மானிடத்தின் அவலத்தை கேட்டான் நின்று
நம்பிக்கை கடல் நாற்புறமும் சூழ்ந்து
தெம்பினை தந்தது முன்னொரு நாள்
தேயும் நாணயம் உலகில் கண்டு
கடலும் விளக்கும் அலைகள் கொண்டு
துன்பமே துணையாகிப் போன இவ்வுலகத்தில்
இன்பத்தை கண்டவன் எவனுமில்லை
அன்பைச் செலுத்தும் மனிதன் இல்லை
ஆறுதல் கூறிட யாருமே இல்லை
அன்பும் பண்பும் எங்கோ சென்று
பகலின் கனவாய் மாறிற்றே இன்று
இரவில் செல்லும் படை எனவே
இனம் தெரியாமல் மோதுகிறோம்
இறைவன் ஒருவனை மறந்து விட்டோம்
இதனால் அன்றோ வருந்துகிறோம் !

ஞாயிறு, 14 நவம்பர், 2010

செம்பனிப் பூவே

அரும்பி நிற்கும் சிறுமலரே செம்பனிப் பூவே -உன்
அருகிருந்து ரசிப்பவர் யார் செம்பனிப் பூவே !
முகமின்று சிவந்ததேன் செம்பனிப் பூவே -உன்
அகம் கவர்ந்த கதிரவனாலோ செம்பனிப் பூவே !
இளமங்கை அழகென்பார் செம்பனிப் பூவே -உன்
அழகெதிரே அவரெங்கே செம்பனிப் பூவே!
பருவ இதழ் தோற்றிடுமே செம்பனிப் பூவே -உன்
பட்டு இதழ் முன்னாலே செம்பனிப் பூவே !
மங்கையரை வென்றுவிட்டாய் செம்பனிப் பூவே -என்
மனமிதை கவர்ந்து விட்டாய் செம்பனிப் பூவே !

இயற்கை எழில்

வண்டுவந்து மலர் தேடித் தேன் எடுக்கும்- சிறு
நண்டு வந்து கரையேறி நடமாடும் -அதனை
கண்டுவிட்டு மீன்கள் எல்லாம் தாளம் போடும் -பெரும்
கடல் அலையும் உடன் சேர்ந்துப் பாட்டிசைக்கும் -வண்ண
குவளைஎல்லாம் குதுகலத்தால் உடல் சிலிர்க்கும் -சின்ன
பவளமணி அழகெங்கும் பறந்து கிடக்கும் -அந்த
பட்டாம்பூச்சி அழகெதிரேஎதுதான் நிற்கும்?
இன்பமென்றால் இதயமெலாம் அதில் தத்தளிக்கும் -நல்ல
இசையென்றால் தமிழ்தானே அங்கு எதிரொலிக்கும் -எழிலான
இயற்கைதானே என்றென்றும் என்னை காதலிக்கும்

குழந்தை என்றால்

வாழையோடு வாழ்ந்துயரும் ஈகை -தென்றல்
மாலையோடு மகிழ்ந்துலவும் மலர் -கூவும்
குயிலோடு பறந்து வரும் பாடல் -ஆடும்
மயிலோடு சென்றுரையும் அழகு!

கோர்வையால் உருவாகும் மாலை ஒன்று -ஒரு
பார்வையால் மலர்ந்து நிற்கும் அன்பு -பருவப்
போர்வையால் படர்ந்து வளரும் காதல் -இன்பச்
சேர்க்கையால் சிரித்துலவும் மழலை !

வீடெலாம் நிறைவாகும் பெண்மை ஒன்றால் -உயர்
நாடொன்று உருவாகும் வீரத்தின் விளைவால் -புலவர்
பாவெல்லாம் கருவாகும் தமிழின் துணையால் -கவிதைக்
கதிரெல்லாம் பயிராகும் குழந்தை என்றால் !

சாலைகளும் நேராகும்

(டாஸ்மாக் திறக்கப்பட்டபொழுது எழுதப்பட்ட கவிதை )

சாராயக் கடைகள் திறந்தாயிற்று -இனி
சந்தோஷத்திற்கு குறைவில்லை
ஆராய்ந்து அரசெடுத்த முடிவால்
ஆகாயத்தில் இருக்கும் விலைவாசி மட்டும்
அங்கேயே இருக்கட்டும் - இனி
மலிவு விலையில் மகிழ்ச்சி எங்கும் பெருகட்டும்

வேலையின்றி இளைஞர்கள்
வீட்டில் இருக்கத் தேவையில்லை
காலை எழுந்தவுடன் அவர்கள்
சாலை ஓர சாரயகடைக்குப் போகலாம்

பாஸ்போர்ட் எடுத்து
பணமழித்து அவர்கள்
பரதேசம் செல்லத்தேவை இல்லை
வெறும் சில்லரையிலேயே இனி
இங்கு சிவலோகம் காணலாம்

நல்வாழ்வை நோக்கி இனி
நடை போடும் நாடு
தாய்த் திருநாடாம் இந்தியாவில்
தனித்திருந்த தமிழகமும் இனி
தேசிய கண்ணோட்டத்தில்
திவ்வியமாய் திளைத்திருக்கும்

சாராய தேவதையின் சாம்ராஜ்யத்தில் இனி
சாலைகள் கூட நேராகும்
சாவுபுரி நோக்கிச் செல்லுகின்ற
சாலைகள் கூட நேராகும் !

சனி, 13 நவம்பர், 2010

கல்கிதான் வரவேண்டும்


ஆக்கும் பிரமன் நாமென்றே
அழகான ரோபோக்கள்
ஆயிரம் ஆயிரம் செய்திடுவோம்

அழிக்கும் சிவனும் நாமென்றே
நியுட்ரான் குண்டுகள்
நித்தம் செய்வோம்

காப்பதொன்றும் நம் கடமை இல்லை
அதற்க்கு அந்த
கல்கிதான் வரவேண்டும்


காவேரிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள அன்னைக் காவேரியே
புகுந்தவீட்டில் நீ இருந்த பொழுது
உன்னை புகழ்ந்தப் புலவர்கள் எத்தனைபேர்

நாத்திவீடென்று ஹேமாவதியிலேயே நீ
தங்கிவிடுவது நியாயம் ஆகுமா

வேட்டகத்துவீடாம் மேட்டுருக்கு
ஆண்டுக்கு ஒருமுறையாவது
நீ அவசியம் வரவேண்டும்

உன் கருணை முகம் பார்த்தபின்தான்
எங்கள் கழனியில் நெல் காய்க்கக் கூடும்

இப்படிக்கு
நீ அங்கேயே தங்கிவிட்டதால்
அல்லலுறும் உன்
அன்புப் பிள்ளைகள்
ஆறரைகோடி தமிழர்கள்

ஜனநாயக அரசு

பேசிப் பேசியே
வளர்ந்துவிட்ட
நமது ஜனநாயக அரசுக்கு
இப்பொழுதெல்லாம்
வேசிகளை தண்டிக்கக் கூட
விசாரணைக் கமிஷன் தேவைப்படுகிறது

வடலூர் வழி

சமுதாய சாக்கடைகளாம்
ஜாதி ஒழிக்க வந்த
சமதர்ம சந்நியாசி

உங்கள்
பார்வதிபுர கடையில்
நாங்கள் கொள்முதல் செய்திருந்தால்
இன்று எங்கள்
ஊர்புரங்கள் விலை போயிருக்காது

அன்று
வடலூர் வழியை மறந்து போனதால்
இன்று
இருப்பதையெல்லாம் இழந்து கொண்டிருக்கிறோம்

நான்


வென்னீர் கடல் மூழ்கி
வேதனை முத்தெடுத்தவன்

காயம் பலப் பட்டதால்
கண்ணிர் மழையில்
காலமெல்லாம் நனைந்தவன்

இதயத்தில் கீறல்கள் ஏராளம்
இன்பத்தில் வந்தவை
ஒன்று கூட இல்லை

எனினும் வாழ்கிறேன்
இறைவன் இருப்பதை நம்பி !

காதலி

விண்மீன்களே
ஏன் இப்படிவிழிகளை
மூடி மூடித் திறந்து விழிக்கிறீர்கள்
இங்கிருப்பது
உங்கள் நிலவல்ல
என் காதலிதான் !

மாண்டுவிடாதிர்கள்

என்னருமை கவிஞர்களே
உங்கள்
வார்த்தை கிடைக்காமல்
வானத்து நிலவு
வாடிவிடப்போவதில்லை

கன்னியரின்
கன்னங்களில்
முத்தமிட
காதலர்கள் இருக்கிறார்கள்
உங்கள்
கவிதைத் தேவையில்லை

நீங்கள்
ஆகாயத்திலிருந்து
அழகை ரசித்ததுப் போதும்
யதார்த்தத்திற்கு இறங்கி வாருங்கள்

இல்லையேல்
மரபுகளில் அமுங்கி
நீங்கள் மாண்டுவிடக்கூடும் !

வெள்ளி, 12 நவம்பர், 2010

ஏன் இங்கு மட்டும்?குடித்துவிட்டு
வண்டி ஓட்டும்
வாகன ஓட்டிகள்

கள்ள காதலுக்காக
குழந்தைகளின்
கழுத்தறுக்கும்
கருணையற்றவர்கள்

காலாவதி
மருந்து விற்கும்
கயவர்கள்

இரண்டு ரயில்களை
ஒரேபாதையில் செலுத்தும்
பொறுப்பற்றவர்கள்

இந்தியாவில் மட்டும்
எமனுக்கு ஏன்
இத்தனை ஏஜண்டுகள் ?
-

செவ்வாய், 9 நவம்பர், 2010

நியாயந்தானா

உலகிலேயே நீளமென்று
ஓயாமல் உன்னை புகழ்கின்றோம்
எங்கள் உயிரை யெல்லாம் எடுப்பதற்கா
இந்த விஸ்வரூபம் நீ எடுத்தாய்

எதிர் வரும் காதலியை நீ
முத்தமிட முயற்ச்சிக்கும் பொழுதெல்லாம்
எங்களில் எத்தனைபேருக்கு மரணம்
இது முறைதானா

தண்டவாளத்தில் ஓடி அலுதததினால்
இப்பொழுதெல்லாம் நீ
அடிக்கடி தரை இறங்கிப் போகிறாயா

காலத்தை அறிவிக்கும்
விடியற்காலை சேவல்களாய்
கூவியதுபோக இன்று நீ
மரண ஓலமாக மாறியது ஏன்

டிக்கெட் இல்லையென்றால்
டி டி ஆரிடம் மாட்டிகொள்வோம்
நீ மட்டும்
பக்கத்து ஊருக்கு டிக்கட் எடுத்த எங்களை
பரலோகத்திற்கு அனுப்பலாமா

எந்திர லோகத்தில்
இறப்புகளை செய்வதற்கு
எருமைகடா போதாதென்று
எமனக்கு வாகனமாய்நீ ஆனாயோ

விடுதலைக்கு முன்பு உன்னைப்பற்றி
காந்தி கண்ட கனவையெல்லாம்
கரியாக்கி புகையாக்கி
காற்றோடு கலந்துவிட்டாய்
இது நியாயம்தானா

மஹாத்மா

மலர்வளையம் வைப்பதோடு
உங்களை மறந்துவிட்ட
மாபாவிகள் நாங்கள்!

அஹிம்சை வழி வந்த உங்களுக்கு
துப்பாக்கியால் பதில் சொன்ன
துர்பாக்கியசாலிகள் நாங்கள்!

இறைவனாக உங்களை ஏற்றிவைத்து
இளைஞர்களுக்கும் உங்களுக்கும்
இடைவெளி ஏற்ப்படுத்திய
இழிபிறவிகள் நாங்கள் !

எனது கவிதைகள்


திருஞான சம்பந்தரே
திருநாவுக்கரசரே
சுந்தரரே
நீங்கள் அர்ச்சித்து
சிதறிய மகரந்தத்தூள்
என்மேல் பட்டதால்
எனக்கும் எழுத வருகிறது
சங்கரனிடம் சமர்ப்பிக்க
உங்களைப்போல்
சத்திய வார்த்தைகள்
என்னிடம் இல்லை
எனினும்
உள்ளத்தில் தோன்றியவற்றை
பிள்ளையெனப்பிதற்றியிருக்கிறேன்
பிழைப் பொறுத்து ஆசிர்வதியுங்கள் !