தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஜூலை, 2016

அரக்க எச்சம்

வருவது
வலை என அறியாது
வாழ்விழக்கும் மீன்

வாழ்விழந்த மீனால்
வாழ்வுவுறும் வலைஞர்

எங்கிருந்தோ
இவரைக் குறி பார்க்கும்
இலங்கை அரக்கன்

உயிர்மைக்கான போராட்டம்
உடன்வரும் இடரை
உணர்வதில்லை

கொல்வதற்கும்
கொல்லப்படுவதற்கும்
நியாயங்கள் உண்டு
முன் இரண்டும்
இயற்கை அங்கீகரித்த
எல்லா உயிர்க்குமான
அடிப்படை விதி

மூன்றாவது மட்டும்
பரிணாம வளர்ச்சியில்
மனிதன் பெற்ற 
அரக்க எச்சம்!


ஞாயிறு, 24 ஜூலை, 2016

முதுமையின் விழைவா

உன் வரவிற்கு பின்னர்
என்னுள்
எப்படி நிகழ்ந்தது
இந்த மாற்றம்?

உன்
கன்னங்குழிச் சிரிப்பில்
நான் ஏன்
கரைந்து போகிறேன்?

உன் சின்ன விரல்
ஸ்பரிசத்தில்
என் சிந்தனைக்குள்
தேனாறு பாய்வதெவ்வாறு?

மூடித் திறக்கும்
இமைகளுக்குள்ளும்
உன் முகம் மட்டும்
தெரிவதெப்படி?

என்
இதயத் துடிப்பில்கூட
உன் பெயரே
உரக்க ஒலிப்பது ஏன்?

பேரன் முகத்தில்
மகன் முகத்தை காணும்
முதுமையின் விழைவா?
அல்லது
காலம் காலமாய்
இதுதான்
இயற்கையின் இயல்பா?