தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஜூலை, 2016

அரக்க எச்சம்

வருவது
வலை என அறியாது
வாழ்விழக்கும் மீன்

வாழ்விழந்த மீனால்
வாழ்வுவுறும் வலைஞர்

எங்கிருந்தோ
இவரைக் குறி பார்க்கும்
இலங்கை அரக்கன்

உயிர்மைக்கான போராட்டம்
உடன்வரும் இடரை
உணர்வதில்லை

கொல்வதற்கும்
கொல்லப்படுவதற்கும்
நியாயங்கள் உண்டு
முன் இரண்டும்
இயற்கை அங்கீகரித்த
எல்லா உயிர்க்குமான
அடிப்படை விதி

மூன்றாவது மட்டும்
பரிணாம வளர்ச்சியில்
மனிதன் பெற்ற 
அரக்க எச்சம்!


ஞாயிறு, 24 ஜூலை, 2016

முதுமையின் விழைவா

உன் வரவிற்கு பின்னர்
என்னுள்
எப்படி நிகழ்ந்தது
இந்த மாற்றம்?

உன்
கன்னங்குழிச் சிரிப்பில்
நான் ஏன்
கரைந்து போகிறேன்?

உன் சின்ன விரல்
ஸ்பரிசத்தில்
என் சிந்தனைக்குள்
தேனாறு பாய்வதெவ்வாறு?

மூடித் திறக்கும்
இமைகளுக்குள்ளும்
உன் முகம் மட்டும்
தெரிவதெப்படி?

என்
இதயத் துடிப்பில்கூட
உன் பெயரே
உரக்க ஒலிப்பது ஏன்?

பேரன் முகத்தில்
மகன் முகத்தை காணும்
முதுமையின் விழைவா?
அல்லது
காலம் காலமாய்
இதுதான்
இயற்கையின் இயல்பா?

செவ்வாய், 7 ஜூன், 2016

பகலவனுக்கு பிரியாவிடை


(Crystal Sherriff என்ற ஆங்கில கவிஞர் Black Holes இன் பாதிப்பு குறித்து Goodbye to the Sun என்ற தலைப்பில் எழுதிய  நான்கு வரி கவிதை  உள்ளத்தை நெருடச் செய்யும்.அக்கவிதையின் தமிழாக்கத்தை இங்கு தந்திருக்கிறேன்.)

வானிலிருந்து அது வெளியே வந்தது
எனது சூரியனை கருமையாக்கியது
எனது வெளிச்சத்தை முடமாக்கியது
எனது பகலை கிரகணம் சூழ்ந்தது       
எனது இரவை  உருவாக்கியது
 கரும் பள்ளங்கள்
கண்ட அனைத்தையும் விழுங்கியது
எனது இதயத்தையும் சேர்த்தே!


சனி, 19 மார்ச், 2016

உன்னால் உயரும்


                                       

வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை


புலியை முறத்தால் விரட்டிய
புறநானுற்றுப் பெண் கூட
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
சான்றோனாக்குதல் தந்தையின் கடனே என
ஆணாதிக்க சிந்தனைக்குள்
அமிழ்ந்து போனாள்

போற்றா ஒழுக்கம் கொண்ட கோவலனைத்
தூற்றாது தலையிலேற்றித் திரிந்தாள் கண்ணகி
அடக்குதலும் அடுக்களையில்
முடக்குதலுமே தம் பணியென
எம் தலைமுறையினர்
சிறையிட்டுச் சிரித்தனர்

என் அன்புப் பேத்தியே
மாற்றங்கள் மலருகின்ற
மகத்தான தருணமிது
சமுதாயச் சன்னல்கள்
மெல்லத் திறந்து
முடங்கிக் கிடந்த நம்மீது
விடுதலை வெளிச்சத்தைப்
பாய்ச்சுகின்ற நேரமிது

இனி ஆணுக்கு நிகராக… அல்ல
அதை விடவும் மேலாகச்
சாதித்துக் காட்டிச்
சரித்திரம் படைப்பது
நம் கடமை!

ஆணினத்தின் பலவீனமாம்
கொலை களவு காமம் மது
இவற்றில் பங்கு கேட்பதல்ல
நாம் கோரும் பெண்ணுரிமை!

ஆடைக் குறைப்பும்
அலங்கார மாற்றங்களும்
அடிமை விலங்கொடித்த
அறிகுறிகள் ஆகாது!

ஜான்ஸி ராணி முதற்கொண்டு
சானியா மிர்சா வரை
சாதனைகளால் மட்டுமே
நினைவு கொள்ளப்படுகிறார்கள்

என் செல்லமே…!
அறிவியல் அரசியல்
இலக்கியம் ஆன்மீகம்
இன்னும் பல துறைகளில்
பெண்கள் கோலோச்சும் போதுதான்
நாம் கொண்ட துயரங்கள்
நம்மை விட்டு விலகும்!

வறுமையில் வாடும் பாட்டியின்
வார்த்தைகளா இவையென
நீ வியப்பது புரிகிறது
அறிவுக்கு வறுமையில்லை
என் அன்புச் செல்லமே!

நாளைய நாடு
பெண்களால் மட்டுமே மலரும்
நம்பிக்கை கொள்
உன்னாலும் இந்த உலகம்
உயரப் போகிறது ஒரு நாள்!

புதன், 2 மார்ச், 2016

புத்தகங்கள் 

http://www.vallamai.com/wp-content/uploads/2016/02/book-store.jpg

   (வல்லமை இதழில் பாராட்டிற்குரிய கவிதையாகத் தேர்வு செய்யப்பட்ட கவிதை)

வண்ண வண்ண சிந்தனைகளை
வார்த்தெடுத்தப் புத்தகங்கள்
எண்ணக் குவியல்களால்
புரட்சிகளை உருவாக்கியப் புத்தகங்கள்
இன்று
கருப்பும் வெள்ளையுமாய் மாறிப் போனது
காலத்தின் கோலம்!

அன்று
வாய் மொழிச் சொற்களில்
வலம் வந்த சிந்தனைகள்
கல்லுக்குள் இடம் மாறி
ஓலைக்குள் உருமாறி
தொழில் புரட்சி ஈன்றெடுத்த
அச்சு இயந்திரத்தால்
காகிதத்திற்குள் புகுந்து
புத்தகமாய்ப் பரிணமித்தது!

புவியின் நிலை மாற்ற
புத்தகங்கள் ஆற்றிய பணி
போற்றற்குரியது!

இன்று
காகிதத்திலிருந்து
டிஜிட்டலுக்குத் தாவும்
அறிவியல் தருணம்!

வடிவ மாற்றமென்பது
இயற்கையின் இயல்பே

போர்டு ஐகானில் பயணிப்பவர்கள்
மாட்டு வண்டிகள்
மரணித்துவிட்டதே என்று
கவலை கொள்வதில்லை!
என்றாலும்
புத்தகங்களுக்கும்
நமக்குமான உறவை
எந்த டிஜிட்டலினாலும்
டெலிட் செய்ய முடியாது! 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

புரையோடிய புற்று நோய்

காலில் செருப்பின்றி
மர நிழல்களை குடைகளாக்கி
பள்ளிச் சென்ற காலமெல்லாம்
பழங்கதையாகிவிட்டது

வணிகமய வாழ்வில்
நிசான் காரில்
வாழ்க்கைப் பறக்கிறது

அன்று
தெருவோர ஏழைக்கு
மதிய உணவை
மனமுவந்து அளித்ததும்
மற்றவர்க்கு உதவும்போது
ஏற்படும் மகிழ்வும்
இயல்பாய் இருந்தது

இன்றோ
இரக்கத்தோடு
உறக்கத்தையும் மறந்த
இலக்கில்லா ஓட்டமொன்று
எல்லாவற்றையும் தொலைத்தது

ஜோடிக்கப்பட்ட மேடையில்
ஆடம்பரப் பேச்சோடு
முதியோருக்கு நிவாரணம்
சொந்தத் தாயும் தந்தையுமோ
முதியோர் இல்லத்தில்

இப்படி
ஏய்த்துப் பிழைப்பவர்க்கே
சமூக அங்கீகாரமென்றால்
நம்முடைய வளர்ச்சி
புரையோடிப் போன
புற்று நோயை ஒக்கும்!


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

வேர்களில் விஷம் வார்த்தால்....விண் வெளியை உழுது
வயல்களாக்கி
பெருங்கடல்களை தூர்த்து
மனைகளாக்கி
பெருமைப்படலாம்

ஆனால்
முன்னேற்றத்தின்
மறு பக்கத்தில்
பண்பை இழந்த மனிதம்
பரிதவித்துக் கொண்டிருக்கிறது

நட்பு கருணை ஈகை
ஒழுக்கம் உண்மை அன்பு
இவையெல்லாம்
காலாவதியான சொற்களாய்
அறிவிக்கப்பட்டு

காமம் துரோகம் களவு
கொலை கொள்ளை ஏய்த்தல்
இவையே வளர்ச்சியின் வழியாய்
முன்மொழியப்படுகிறது

பண்பில்லா வளர்ச்சி
சாக்கடையில் கலந்த
சந்தனமாகிவிட்டது

வேர்களுக்கு
விஷம் வார்த்தால்
விழுதுகள் என்ன
அமுதமாப் பொழியும் ?

சனி, 20 பிப்ரவரி, 2016

உணர்வது எப்போது
     

                                     உணர்வது எப்போதுதன் வயிறு காய்ந்தாலும்
இயலாதவர்க்கு
இயன்றதை செய்யும்
எம் தமிழர் பண்பாடு 
எங்கே போனது

குடும்பங்களை இணைத்து
குதுகலித்தத் திருமணங்கள்
நீதி மன்ற வாயிலில்
நித்தம் மிதிபடுவதேன்

பசுவிற்கும் புறாவிற்கும்
நீதி தந்த எம் நெறிமுறை
பணத்திற்குள் கரைந்து
பாழானது எவ்வாறு

வள்ளலாரையே
சந்தேகித்த ஆன்மீகம்
போலிச் சாமியார்களுக்கு
புகலிடமானது ஏன்

ஏழைக்கு எழுத்தறிவித்தல்
இறைப் பணியே என்ற நாம்
கல்வியை காசாக்கும்
கலாச்சாரத்தை எங்கு கற்றோம்

 பண்பில்லா முன்னேற்றம்
பம்பர வாழ்க்கையாகி
தள்ளாடிச் சுற்றி
தானே கவிழும் என்பதை
என்று நாம் உணரப்போகிறோம்

திங்கள், 15 பிப்ரவரி, 2016

அந்நிய அடிமை

            வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு   செய்யப்பட்டது

செஸ் விளையாட்டில்தான்
உனக்கும் எனக்குமான
முதல் அறிமுகம்
அந்தக்கால ஆண்மைமிக்கத்
திரை கதாநாயகர்கள்
உன் மீதேறி கம்பீரமாய்
இசைத்த பாடல்கள்மீது
எனக்கு அளவற்ற காதல்
கிண்டி மைதானத்தில்
நீ நொண்டி அடித்து பலரை
 ஓட்டாண்டியாய் ஆக்கியதால்
ஜெமினி பாலம் ஓரமாய்
நீயும் சிலை வடிவானாய்
ஆனாலும் எனக்கொன்று
புரியவில்லை
ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்
ஓடி விளையாடும்
எங்கள் ஜல்லிகட்டு காளைகள்மீது
எங்களவர் காட்டும் அக்கரை
இராணுவத்திலும் காவல்துறையிலும்
வீரர்களை வேதனையோடு சுமப்பதோடு
விருந்தினர் முன்னே நடனமும் ஆடும்
உன் மீது ஏன் பிறப்பதில்லை
ஓ    நீ
அந்நிய தேசத்திலிருந்து வந்த
அடிமை என்பதாலா

சனி, 13 பிப்ரவரி, 2016

எங்களை அறியவில்லை            வல்லமை இணைய இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு                                            செய்யப்பட்டது

ஆண்டவன் பணிக்கு வந்த உன்னை
அங்காடித் தெருக்கள் தோறும்
கையேந்த வைத்த
கருணையற்றவர்கள் நாங்கள்

அன்பிற்கு நீ தந்த இசைவினை
அடிமை சாசனமென்று எண்ணி
உன்னை அடக்கி விட்டதாய்
போலிப் பெருமிதத்தில் புன்னகைக்கிறோம்

உன் பலம் உனக்குத் தெரியாதென
நிச்சயமாய் நம்பும் நாங்கள்
எங்கள் பலவீனங்களை
என்றுமுணர்ந்ததில்லை

அதனால்தான்
இயற்கையை வென்றுவிட்டோமென்ற
எங்கள் இறுமாப்பு
கொட்டிய மழையில்
முற்றிலுமாய் கரைந்தது
பண்பற்ற எங்கள் செய்கைகளால்
நீ பதற்றமடையும் பொழுதெல்லாம்
மதம் பிடித்துவிட்டதாய் அறிவித்து
மயக்க ஊசிப் போடுகிறோம்
ஆனால் நாங்களோ
மத வெறியுடனேத் திரிகிறோம்
மயக்க ஊசிப்போட மட்டும்
மருத்துவர் எவருமில்லை!


வியாழன், 11 பிப்ரவரி, 2016

என்னவாக இருக்கும்                    வல்லமை மின் இதழில் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டதுபாரம்மா இங்கு வந்து
பாசத்துடன் யாரோ ஒருவர்
நம் படத்தை வரைந்து
வாசகங்கள் எழுதுமுன்
வந்த மழை காரணமாய்
ஓடிவிட்டார்போலும்!

பாசமென்றா நினைத்தாய்
பைத்தியக்காரி
ஆடுகள்தான் இங்கு
சிறுநீர் கழிக்கும் எனும்
எரிச்சல் எச்சரிக்கை
செய்ய நினைத்திருப்பார்கள்

அல்லது
படம் வரைந்து
பிச்சை எடுக்கும்
அந்தக் கிழவரின்
கைவண்ணமாய்
இருக்கக்கூடும்

நாளைய தேர்தலில்
நம் சின்னத்தில்
போட்டியிடும் வேட்பாளர்
சுவரில் முன்பதிவு பெற
தீட்டிய சித்திரமாய்
இருக்கலாம்

இல்லையெனில்
விரைவில் திறக்க இருக்கும்
கறிக்கடையின்
விளம்பரமாயும் இருக்கலாம்
இங்கிருப்பது நல்லதல்ல
வா வா
விரைந்து செல்லலாம்

மாயப்போராட்டம்
உன்னை நோக்கி
நாங்கள் வரும்போது
நீ ஓடுவதும்
எம்மை நோக்கி
நீ வரும்போது
நாங்கள் ஓடுவதும்
இது என்ன
\மாயப் போராட்டம்

வானுக்கு சென்ற நீ
வருவாயா என
எத்தனை ஆண்டுகள்
ஏங்கியிருக்கிறோம்
இன்று இப்படி
ஏரளாமாய் வந்து
போகமாட்டாயா என
புலம்ப வைத்தது ஏன்

கெடுப்பதும்
கெட்டாரை வாழவைப்பதும்
நீயே என்றான்
வான்புகழ் வள்ளுவன்
கெடுத்துவிட்டாய்
எப்பொழுது
வாழ வைப்பாய்?


செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

நாளைய விடியல்


(   ((    
              (வல்லமை மின் இதழில் பாராட்டிற்குரிய கவிதையாக தேர்வு                
                                      செய்யப்பட்ட கவிதை)


பத்துப் பாட்டு
எட்டுத் தொகை
பதினெண் கீழ்கணக்கென
ஒரு கோடி
இலக்கியங்கள் இருந்தும்
மம்மி டாடியிலேயே
மகிழ்கிறது நம் இனம்

குழலினிது
யாழினிதென்பர்
தம் மக்கள்
ஆங்கிலம் பேச கேளாதார்
இதுவே
இன்றையக் குறளாய்
எங்கும் ஒலிக்கிறது

வாவ் என்ற ஒலியே
நம்
வாழ்வின் தரத்தை
நிர்ணயிக்கிறது

கத்திரிக்காயை
ப்ரிஞ்ஜால் என்பதே
அறிவின் அடையாளமாய்
அங்கிகரீக்கப்படுகிறது

அன்னை மொழியில் பேச
அவமானப்படும்
ஒரே இனமென
உலகெங்கும் நாம்
அறியப்படுகிறோம்

இந்த இழிநிலைகளை மாற்ற 
உயிரெழுத்துப் பழகும்
இளந் தளிரே
உன்னால் மட்டுமே முடியும்


மொழி என்பது
இனத்தின் இதயம்
இதயம் துறந்த இனம்
பிணமொக்கும் என்பதை
நம்மவருக்கு
உரக்க சொல்
நாளைய விடியலாவது
நன்மை பயக்கட்டும்!
வெள்ளி, 29 ஜனவரி, 2016

புது வாள்


(வல்லமை இதழில் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டது)பூட்டுகளுக்குள் புதைந்துவிட 
நான்
புராண காலத்து பெண் அல்ல
பூமியைப் புரட்டிப்போடும்
புதுயுகத்தின் அடையாளம்!

நிலம் பார்த்து நடந்து
நித்திரையைத் துறந்து
சுயத்தை இழக்கும்
சோகச் சுவடல்ல நான்!
வானில் வலை வீசி
வரலாற்றை உருவாக்கும்
அடுத்தத் தலைமுறையின்
ஆரம்பம்!

வீட்டிற்குள் மாந்தரைப்
பூட்டிவைத்த விந்தை மனிதரை
புறக்கணித்த பாரதிப்  படையின்
புது வாள்!

அன்று
உள்ளே வைத்துப் பூட்டியது
எங்களை உறைய வைக்க
இன்று
வெளியே பூட்டுவது
எங்கள் இறகுகளை விரிக்க!

இறகு விரித்து
இன்னல் துடைப்போம்
பூட்டுகள் திறந்து
புது வழி அமைப்போம்!

புதன், 27 ஜனவரி, 2016

இமைகள் இல்லா விழிகள்

மழை நீர் மாசுபட்டால்
பயிர்களின் உயிர்மை
பறிபோகும்

இமைகள் இல்லா விழிகள்
பார்வையை இழக்கும்

உமிழும் எச்சில்
கடவுளுருவாய்
காட்சி தந்தாலும்
வணக்கத்திற்குரியதாய்
அது ஏற்கப்படாது

கடையாணி இல்லா
வண்டிப் பயணம்
களிப்பைத் தராது

பளபளக்கும் பட்டாடைகள்
செத்தப் பூச்சிகளின்
சாபத்தையே தாங்கி நிற்கும்

கொள்ளை பணத்தில்
கோவில் கட்டினால்
கற்சிலைகள் இருக்கும்
கடவுள் இருக்காது

பண்புகள் இல்லா
நாட்டின் வளர்ச்சி
பண மேடாகி
அமைதியை இழக்கும்!