தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூன், 2015

நரகம்



                                 (எழுத்து.காம் இல் வெளியான கவிதை)

தூரத்தில் கேட்கும் ஹாரன் ஒலி 
பதைத்தெழும் பயணிகள் 
பிதுங்கி வழியும் கூட்டத்துடன் 
தள்ளாடி வந்து நிற்கிறது பஸ் 

பலாப்பழ ஈக்களாய் 
மூர்க்கமாய் மொய்க்கும் பயணிகள் 
எதிர்கால பயமின்றி 
ஏணியின் மீது ஏறும் 
இளைஞர் கூட்டம்! 

கூடையை உள்ளே தள்ள 
கோபமாய் கூச்சலிடும் 
மீன்கார மூதாட்டிகள் 

வேண்டுமென்றே இடித்தான் 
யதேச்சையாகத்தான் நடந்தது 
பட்டிமன்றப் பொருளாகி 
பதை பதைக்கும் பெண்கள் 

நெரிசலில் சிக்கிய 
இடுப்பு குழந்தையின் 
அடக்க முடியாத அழுகை 

சில்லரை இல்லை 
கண்டக்டரின் சிடுசிடுப்பு 
கொரிய செல்களின் 
கொலைவெறி கூச்சல் 

டாஸ்மாக் டான்சரின் 
ஆடை அவிழ்ப்பு 
அலங்கோலம் 

நாலே ரூபாயில் 
நரகம் பார்க்க வேண்டுமா 
எங்கள் காலை நேர 
நகரப் பேருந்தில் 
ஒரே ஒரு முறை 
பயணம் செய்யுங்கள்



புதன், 24 ஜூன், 2015

உலகம் அன்றுதான் பேசும்

               (எழுத்து.காம் படக்கவிதைப் போட்டியில்  பங்குப் பெற்று                                               பரிசுப்  பெறத்தவறிய கவிதை)


பொங்கி வரும் சோகத்தை 
கண்களில் தாங்கி நிற்கும் 
கன்னியே நீ யார் 

எல்லையிலே இரவும் பகலும் 
எமக்காகப் போராடி 
உயிர் நீத்து மறைந்தாரே 
அந்த உத்தமரின் மகளா 

ஏழ்மையால் எல்லைத் தாண்ட 
இரக்கமற்ற ஆந்திரத்து காவலர்தம் 
குண்டு தாங்கி சரிந்தாரே 
அவரது செல்லக் குழந்தையா 

ஈழத்து தமிழ் மண்ணில் 
இனம் காக்க மடிந்த 
வீரம் செறிந்த வேர்கள் 
விளைவித்த விழுதா 

கடலுக்குள் எல்லை காட்டி 
கருணை இல்லா கயவர்களால் 
சுடப்பட்டு செந்நீரில் கரைந்தாரே 
எம்மீனவரின் இரத்த உறவா 

இனியொரு கவலை உனக்கு வேண்டாம் 
இழந்த தமிழினம் ஒருநாள் எழும் 
வழிகின்ற விழிநீரைத் துடைத்தங்கு 
வாழுகின்ற வழிதேடி வீரம் காட்டும் 
உலகம் நமக்காய் அன்றுதான் பேசும்!

செவ்வாய், 23 ஜூன், 2015

வரம் வேண்டும்…







(வல்லமை இணைய இதழில் இக்கவிதை, வெளியான வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது)


ஆசைக்கொரு மகனை

அன்பாய் ஈன்றெடுத்து
தோளில் சுமந்து
நாளெல்லாம் திரிகின்றேன்

இன்னொருவர் தோளில்

எத்தனை நாள் பயணம்
தன் காலில் தான் நிற்கும்
தன்மையை அவன் 
பெற்றாக வேண்டும்

என் அனுபவ உயரத்தில்

அவன் அகிலத்தைக் கண்டு
தனக்கொரு வழியினை
தானே அமைத்து 
தலை நிமிர்ந்து
நடந்திட வேண்டும்!

ஊர் கோவில் திருவிழாவை

உயரத்தில் இருந்துப் பார்த்தாலும்
தானுயரும் நிலை வரும்பொழுது
வானோக்கி நடக்காத
வரமவனுக்கு வாய்க்க வேண்டும்!

தள்ளாடி நான் நடக்கும்

பொல்லாத காலம்
புலருகின்றபொழுது
எல்லோரும் போற்றும் வண்ணம்
என் இரு கரம் பற்றி
மெல்ல அழைத்துச் செல்லும்
நல்ல மனம் நாளு மவன்
நாதனருளால் பெற வேண்டும்!





ஞாயிறு, 21 ஜூன், 2015

நானும் பழகிக் கொள்ளுகிறேன்


                     (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)


நீர்த்தேடி நித்தமும்
நீண்ட குழாயின்
குமிழ் திறந்து பார்க்கிறேன்
உஸ்ஸென்று சத்தம் மட்டுமே
உள்ளிருந்து வருவது ஏன்
உழைத்து வியர்த்தும்
உயரம் அடையாத 
உழைப்பாளியின்
உஷ்ண மூச்சா
அன்னைத் தமிழிருக்க
ஆங்கில மோகங்கொண்டலையும்
உம்மவரைப் பார்த்து
உலகம் விடும்
ஏளன இழி மூச்சா
ஊழல் பெருச்சாளிகள்
நாட்டையே நாசம் செய்ய
ஏதும் செய்ய இயலா
ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சா
ஆறு குளம்  ஏரியென 
அத்தனையையும் கட்டிடங்களாக்கி
வனங்களோடு வளங்களையும்
இரக்கமின்றி அழித்ததால்
இயற்கை விடும் எரிச்சல் மூச்சா
பாய்ந்து வரும் ஆறுகளில்
பக்கத்து மாநிலங்கள்
அடுக்கடுக்காய் அணைகள் கட்ட
அழிந்து வரும் உம்
வாழ்வாதரத்தின் இறுதி மூச்சா
என்னவென்று நீங்களே
உடன் வந்து பாருங்கள்
அப்படியே
பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலிருந்தால்
எனக்கொன்று கொடுங்கள்
நானும் பழகிக் கொள்ளுகிறேன்!

வெள்ளி, 19 ஜூன், 2015

பாவத்தில் பங்கில்லை



                    (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)

நீண்ட நெடிதுயர்ந்த மரங்களை
நெடுஞ்சான் கிடையாய் வீழ்த்தி
நெடுஞ்சாலைகள் அமைத்தோம்
நேரத்தை மிச்சப்படுத்த

உயர்ந்த குன்றுகளை
உடைத்து கல்துகள்களாக்கி
கட்டிடங்கள் அமைத்தோம்
காலத்தின் தேவைக்காக

நீர் தேக்கும் மையங்களாம்
ஆறு குளம் ஏரியென
அத்தனையும் தூர்த்து
அடுக்குமாடிகள் கட்டினோம்
இனப் பெருக்கத்தை எதிர் கொள்ள

ஆடு மாடு கோழி மீனென
அத்தனை உயிரழித்தோம்
உயிர்வாழத் தேவை
உணவு என்பதால்

அத்தனை அழித்தல்களும்
சமூக குறிக்கோளொன்றைச்
சார்ந்திருந்தது
ஆனால்
பட்டுப் புழுக்களே
உங்களை பலியிடுவது
பணத்தின் பலம் காட்டும்
பகட்டிற்காக மட்டுமே

ஆனாலும்
அந்தப் பாவத்தில்
எனக்கேதும் பங்கில்லை
ஏனென்றால்
பட்டாடை அணிய 
பணவசதி எனக்கில்லை
என் புன்முறுவலதை
உங்களுக்கு புரியவைத்திருக்கும்!


வியாழன், 18 ஜூன், 2015

நிழல் கொடுப்போம்


                           (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)


நாளும் தவமிருந்து
நான் பெற்ற வரமடா நீ
என் கனவுகளின் மெய்பொருளும்
கவிதைகளின் உட்பொருளும்
நீ மட்டுமே

சின்னக்கல் உன்னை இடரினாலும்

என் சிந்தை கலங்குமடா
உயரத்தில் உனைப் பார்க்க
என் உள்ளம் நடுங்குதடா

தள்ளாடித் திரிந்த தகப்பனவன்
சொல்லாமலே போய்விட்டான்
அதனால்
பொல்லாத வறுமையை காட்டி
உன்னைப் பள்ளிக்கு அனுப்பாமல்
தேநீர் கடைக்கு
தெருவோரம் தாள் பொறுக்க
மெக்கனிக் ஷெட்டிற்கு
மேலத் தெரு ஓட்டலுக்கு
உழைக்கச் சொல்லி அனுப்பி
அதில் உயிர் வாழ்வேன்
என  நினைத்துத்தான்
மரமேறிச் சென்று என்
மனத்தை வதைக்கிறாயா

நீவீத் தலைவாரி 

நெற்றியில் முத்தமிட்டு 
பாடசாலை செல் பைந்தமிழே
என நாளும் வழியனுப்பும்
பாவேந்தன் பேத்தியடா நான்!

எட்டாதக் கல்வியினை
எப்பாடு பட்டேனும் உனக்களித்து
யாரும் எட்டாத உயரத்தை
உன்னை எட்டச் செய்வேன்

இப்போது இறங்கி வா 

வறுமையை வென்று
வாழ்வை வசமாக்குவோம்
வளர்ந்த மரமாகி
வறியவர்க்கு நிழல் கொடுப்போம்



புதன், 17 ஜூன், 2015

இறப்பு வரை

                                                              
                         
                       (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)

அன்று
கடலோரம் நீ
காதலால் கட்டிய கோட்டை
மணல் கோட்டையாகுமென
மனதாலும் நினைக்கவில்லை

உச்சி சிலை
உயிர் காக்கும்
சாமி என்றாய்

மீசை இரண்டும்
நம் ஆசை காக்க
ஆண்டவன் இட்ட
வேலி என்றாய்

சின்ன உருவமெல்லாம்
நாம் சேர்ந்து வாழ
வண்ணக் கவிபாடும்
வானத்து தேவர் என்றாய்

அத்தனையையும் பொய்யாக்கி
பொல்லா நோய்க்குள்
நீ ஏன் 
புதைந்து போனாய்

உன் சிரித்த முகத்தையும்
சிந்திய சொற்களையும்
கைபேசியில் அடைத்து வைத்து
கண்ணீரில் வார்த்தெடுத்து
தினமும்
கனவுகளில் கரைகிறேன்

மண் காணும் இடமெல்லாம்
உன் மணல் கோட்டையும்
இடிந்து போன 
என் மனக் கோட்டையும்
இன்னமும் இதயத்தில் விரிகிறது
இனியும் விரியும்
என் இறப்பு வரை







செவ்வாய், 16 ஜூன், 2015

யார் மீது கோபம்


                        (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)


சுட் டெரிக்கும் பார்வை

சூரியனை கருக்கும் கூர்மை
யார் மீது கோபம் உனக்கு

மற்ற சிறுவருக்கெல்லாம்

செல்வத்தோடு சீருடையும் தந்து
பள்ளிச் செல்ல வைத்துவிட்டு
பாதையோரப் பறவையாய் 
உன்னை மட்டும் படைத்தானே
அந்த பரமன்  மீதா?

எத்தனைதான் உழைத்தாலும்

ஏற்றம் எதுவும் காண இயலாது
சிந்தையது கலங்கி சீரழிக்கும்
குடிக்குள் குடிமூழ்கிப் போனானே
அந்த தந்தை மீதா

சிறுவாட்டு பணத்தையெல்லாம்

சீட்டு கம்பெனியில் தொலைத்து
சீரழிந்து  சிதறிப் போனாளே
செல்ல அம்மா அவள் மீதா

அந்நியர்கள் இங்கிருந்து அகன்று

அறுபதாண்டுகள் ஆகியும் கூட 
சொந்த மைந்தர்களை தினம்
சோற்றுக்கு அலைய வைக்கும்
சுதந்திர நாட்டின் மீதா

சின்னஞ் சிறுவரெல்லாம்

சிதைக்கப்பட்ட சிற்பங்களாய்
எங்கும் அலைவது கண்டும்
சங்கடப்படாத சமூகத்தின் மீதா

வாழவழி தெரியாத உனக்கு

ஏதும் செய்ய இயலாது
புகைப்பட மெடுத்தவர் மீதா
கவிபாட வந்த எங்கள் மீதா

யார் மீது கோபமாயினும்

நாளையது நிச்சயம் மாறும்
விடியல் உன் இருள் மீது  
வேண்டிய வெளிச்சம் பாய்ச்சும்
நம்பிக்கையோடிரு 
நாளைய உலகம்
உனக்காகவே சுழலும்!

திங்கள், 15 ஜூன், 2015

நினைத்ததெல்லாம் நடந்தும்…


                       (வல்லமை இணைய இதழில் இடம்பெற்ற கவிதைகள்)

                           
அந்த காலத்து காதலர்களா
அல்லது
அற்ப சுவைக்காக
ஆண்டவனிடம் சாபம் பெற்ற
ஆதாமும் ஏவாளுமா
இவர்கள்
எதுவும் இல்லாதிருந்தபோது
எல்லாமும் பெற்றிருந்தனர்
எல்லாமும் கிடைத்தபோது
எதையோ இழந்து நிற்கின்றனர்!
ஆடைகள் இல்லாதபோது
இவர்கள்
அவமானம் அடைந்ததில்லை
இப்போது
ஆடை அரைகுறையானதால்
மானம்
மரணமடைந்து கொண்டிருக்கிறது!
மலை மரம் வெட்டவெளி
எங்கு இருந்தாலும்
இவர்களது
அந்தரங்கம் அசிங்கப்பட்டதில்லை
இப்போது
மூடிய அறைகளுக்குள்ளே கூட
முகம் தெரியாத கருவிகளால்
இவர்கள்
முக்காடு நீக்கப் படுகிறது!
ஓ மனித இனமே
உன் ஆறாம் அறிவு
நேர்மையின்றி நடந்ததால்
நினத்ததெல்லாம் நடந்தும்
நீ
நிர்வாணமாய் நிற்கிறாய்!