தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 8 டிசம்பர், 2014

மூக்கு முகம் சந்தோஷம்

               


(ஜாக் ப்ரிலட்ஸ்கி (Jack Prelutsky)  அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.  அவருடைய Be Glad Your Nose is on Your Face என்ற இந்த கவிதை படிப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றினாலும் படைப்பின் மேன்மையை பறை சாற்றுகிறது."ஆட்டிற்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறான்" என்ற நமது பழமொழியை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது)

வேறு இடத்தில் ஒட்டப்படாமல்
முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென
நீ சந்தோஷப்படு!
இருக்கின்ற இடத்தைவிட்டு
வேறு இடத்தில் அது இருந்திருந்தால்
நீயே உன் மூக்கை
முற்றிலுமாய் வெறுத்திருப்பாய்

கற்பனை செய்து பார்
கால் விரல்களுக்கிடையில்
அது அமைந்திருந்தால்
பாதத்தை நுகரவேண்டிய கட்டாயம்
உனக்கு விருந்தாகவா இருக்கும்?

உச்சந்தலையில் மூக்கு இருந்திருந்தால்
அச்சத்தின் ஊற்றாய் மாறியிருக்கும்
முடியுடன் அது கொள்ளும் மோதல்
விரக்தியின் எல்லைக்கு
உன்னை விரட்டியிருக்கும்!

காதுக்குள் மூக்கு இருந்திருந்தால்
பேரழிவை அது உருவாக்கும்
நீ தும்முகின்ற நேரமெல்லாம்
மூளைக்குள் பூகம்பம் வெடிக்கும்!

மாறாக
முகவாய்க்கும் கண்களுக்குமிடையே
அழகாய் அமைந்திருக்கிறது மூக்கு
வேறு இடத்தில் ஒட்டப்படாமல்
முகத்தில் அமைந்திருக்கிறதே மூக்கென
நீ சந்தோஷப்படு!


சனி, 22 நவம்பர், 2014

தங்க மலர்கள்


 (ஆங்கில கவிஞர்களில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவருடைய கவிதைகளில் ஒன்றான The Daffodils என்ற கவிதையினை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன் )


செல்லுமிடமறியா மேகமென
பள்ளம் குன்றென திரிந்திருந்தேன்

தங்க மலர் கூட்டமொன்றை
தற்செயலாய் காணப் பெற்றேன்

ஆர்ப்பரிக்கும் கடலோரம் அவை
முடிவிலா வரிசையாய்
அணிவகுத்து நின்றன!

ஒரே பார்வையில்
பல்லாயிரம் மஞ்சள் மலர்கள்
தலையாட்டி நடமிடக் கண்டேன்!

பின் நின்ற அலைகளின்
பேரரவ ஆட்டம்
பூக்களின் நடனம் முன்
பொலிவிழந்து போனது!

காணற்கரிய இக்காட்சியினை கண்டு
களிக்காதவன் கவிஞன் இல்லை

கண்டேன்... கண்டேன்...
கண்டுகொண்டேயிருந்தேன்!

சின்னதாய் ஒரு நினைவு
சித்திரக் காட்சி இதனால்
எனக்கு சேர்வதுதான் என்ன?

அமைதியற்ற  நாட்களில்
வெறுமையுற்ற மன நிலையில்
வீழ்ந்து கிடக்கும் பொழுதெல்லாம்
உள்ளிருக்கும் விழிகளில்
ஒளியூட்டும் இக்காட்சி!

தனிமையுற்ற நாட்களில்
இனிமையதை சேர்க்கும்!

தாவி எழும் உள்ளம்
தங்க மலர்கள் இவற்றோடு
தளிராட்டம் போடும்!


திங்கள், 26 மே, 2014

கவிதாஞ்சலி


(எனது மனைவியின் தாயார் திருமதி சகுந்தலா அவர்கள் 20.04.2014 அன்று தீ விபத்தில் காயமடைந்து 22.04.14 அன்று காலமாகிவிட்டர்கள். அவர்களது நினைவாக என்னுள் எழுந்த உண்ர்வுகள் இங்கு கவிதையாக.....)
பொல்லாத அந்த ஞாயிறை
ஏன் புலர வைத்தாய்
வெல்ல இயலாத விதியினை
வீட்டிற்குள் ஏன் வரவழைத்தாய்

அன்புற்றோர் அருகிலிருந்தால்
துன்புறுவர் என்றா
தனிமையில் இருந்தன்று
தணலுக்குள் மெழுகானாய்

பசியாற்றும் செயலே
பண்பெனக் கொண்டதனால்
தீயின் பசிக்கு உன்னைத்
தின்னக் கொடுத்தாயோ

வெந்தத் தேகத்திலும்
வேதனையை காட்டாது                                                          
சொந்தங்களின் சுகம் நாடி
சொர்க்கத்திற்குள் புகுந்தாயா

வேரிலே நீர்வார்த்து
விரிந்த ஆலமரத்தின்
விழுதுகளின் விழிகளை நீராக்கி
விரைந்து நீ எங்கு சென்றாய்

பாசமென்னும் நூல் எடுத்து
பண்பென்னும் மாலை தொடுத்து
பார் புகழ தந்துவிட்டு
பறந்து நீ எங்கு சென்றாய்


அயோத்தியின் நாயகனே அன்று
மனதிலே உனைச் சுமந்த
மாருதியின் வாலில்
தீச் சுடக் கண்டாய்
நெஞ்சிலே சுமந்த சீதையை
நெருப்பினில் குளிக்க செய்தாய்

இன்று
அன்றாடம் வழிபட்ட அன்னையை
அக்னிக்குள் அங்கம் கரைத்தாய்
தீராத அன்புற்ற உன் அடியாரைத்
தீக்கிரையாக்கும் தீயவனா நீ

உன்னவள் கண்ணீர் உகுத்தும்
இல்லற ஜோதியாய் இருந்தவளை
அருட் ஜோதியால் ஏன் அரவணைத்தாய்
அனைவரையும் பதற வைத்தாய்

உடல் தவிர்த்து உயரே நீ இருந்தாலும்
உன்னைத் தேடி ஓடிவரும்
ஒற்றை மரப் பறவைகள் நாங்கள்
என்றும் எப்பொழுதும் எக்கணமும்
மாறாத நினைவோடும் மணிவிழிகளில் நீரோடும்!