தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 ஜனவரி, 2017

புதுவடிவம்


தீயிடல் இல்லை 
கல்லெறிதல் இல்லை 
ஆனாலும் 
அரசுகள் அசைகின்றன 

அடிதடி இல்லை 
ஆபாச வசவுகள் இல்லை 
எனினும் 
காளைகளின் பேரிறைச்சல் 
கடல் தாண்டியும் கேட்கிறது 

தலைவர்கள் எவருமில்லை 
ஆனாலும் 
தலைவர்களாகவே 
எல்லோரும் தெரிகிறார்கள் 

ஊழல்வாதிகளும் 
ஊடக நரிகளும் 
கபட வேஷதாரிகளும் 
கரையேற்றப்படுகிறார்கள் 
ஆனாலும் 
பகலிலும் இரவிலும் 
இவர்கள் மீதுதான் 
வெளிச்சம் பாய்ந்து கொண்டே இருக்கிறது 

மகாத்மாவின் அறப்போராட்டம் 
மெரினா மண்வெளியில் 
புதுவடிவம் பெறுகிறது 

இவர்களது கோரிக்கை மீது 
இருவேறு கருத்து இருக்கக்கூடும் 
ஆனாலும் 
இவர்களது போராட்ட வடிவத்தை 
எவராலும் புறந்தள்ள முடியாது 

உரிமைக்கானக் குரலை 
ஒலிப்பது எவ்வாறென்று 
அரிச்சுவடியை ஆத்திச் சூடியாய் 
அடுத்தத் தலைமுறைக்குத் தந்திருக்கிறார்கள் 

இனிவரும் போராட்டங்கள் எல்லாம் 
இவர்கள் போட்ட 
இராஜப் பாதையிலேயே 
எவருக்கும் இடையூரின்றிப் 
பயணிக்க வேண்டும் 
இல்லையெனில் 
இந்திய அரசியல்வாதிகளே 
ஈ எறும்பும் உங்களை மதிக்காது 

கற்று கொடுப்பது எங்கள் இனம் 
எங்களுக்கு கற்று கொடுக்க நினைப்பது 
அறிவீனம் என்பதை 
மெரினா மணல் துகள்கள் 
எதிரியாய் வரும் எவருக்கும் 
இனி உரக்க சொல்லும் 

வாடி வாசல் வழியாகப் 
புதிய வரலாற்றைப் 
படைத்திருக்கிறார்கள் 
எங்கள் இளம் காளைகள்!