தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 19 ஜூன், 2015

பாவத்தில் பங்கில்லை



                    (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)

நீண்ட நெடிதுயர்ந்த மரங்களை
நெடுஞ்சான் கிடையாய் வீழ்த்தி
நெடுஞ்சாலைகள் அமைத்தோம்
நேரத்தை மிச்சப்படுத்த

உயர்ந்த குன்றுகளை
உடைத்து கல்துகள்களாக்கி
கட்டிடங்கள் அமைத்தோம்
காலத்தின் தேவைக்காக

நீர் தேக்கும் மையங்களாம்
ஆறு குளம் ஏரியென
அத்தனையும் தூர்த்து
அடுக்குமாடிகள் கட்டினோம்
இனப் பெருக்கத்தை எதிர் கொள்ள

ஆடு மாடு கோழி மீனென
அத்தனை உயிரழித்தோம்
உயிர்வாழத் தேவை
உணவு என்பதால்

அத்தனை அழித்தல்களும்
சமூக குறிக்கோளொன்றைச்
சார்ந்திருந்தது
ஆனால்
பட்டுப் புழுக்களே
உங்களை பலியிடுவது
பணத்தின் பலம் காட்டும்
பகட்டிற்காக மட்டுமே

ஆனாலும்
அந்தப் பாவத்தில்
எனக்கேதும் பங்கில்லை
ஏனென்றால்
பட்டாடை அணிய 
பணவசதி எனக்கில்லை
என் புன்முறுவலதை
உங்களுக்கு புரியவைத்திருக்கும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக