தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 ஜூன், 2015

யார் மீது கோபம்


                        (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)


சுட் டெரிக்கும் பார்வை

சூரியனை கருக்கும் கூர்மை
யார் மீது கோபம் உனக்கு

மற்ற சிறுவருக்கெல்லாம்

செல்வத்தோடு சீருடையும் தந்து
பள்ளிச் செல்ல வைத்துவிட்டு
பாதையோரப் பறவையாய் 
உன்னை மட்டும் படைத்தானே
அந்த பரமன்  மீதா?

எத்தனைதான் உழைத்தாலும்

ஏற்றம் எதுவும் காண இயலாது
சிந்தையது கலங்கி சீரழிக்கும்
குடிக்குள் குடிமூழ்கிப் போனானே
அந்த தந்தை மீதா

சிறுவாட்டு பணத்தையெல்லாம்

சீட்டு கம்பெனியில் தொலைத்து
சீரழிந்து  சிதறிப் போனாளே
செல்ல அம்மா அவள் மீதா

அந்நியர்கள் இங்கிருந்து அகன்று

அறுபதாண்டுகள் ஆகியும் கூட 
சொந்த மைந்தர்களை தினம்
சோற்றுக்கு அலைய வைக்கும்
சுதந்திர நாட்டின் மீதா

சின்னஞ் சிறுவரெல்லாம்

சிதைக்கப்பட்ட சிற்பங்களாய்
எங்கும் அலைவது கண்டும்
சங்கடப்படாத சமூகத்தின் மீதா

வாழவழி தெரியாத உனக்கு

ஏதும் செய்ய இயலாது
புகைப்பட மெடுத்தவர் மீதா
கவிபாட வந்த எங்கள் மீதா

யார் மீது கோபமாயினும்

நாளையது நிச்சயம் மாறும்
விடியல் உன் இருள் மீது  
வேண்டிய வெளிச்சம் பாய்ச்சும்
நம்பிக்கையோடிரு 
நாளைய உலகம்
உனக்காகவே சுழலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக